பௌத்த உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கை! விரைந்து செயற்பட்ட பிரதமர் - உடனடியாக விடுத்த பணிப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவிடம் அகில இலங்கை பௌத்த காங்கிரஸினால் பௌத்த உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்று இன்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளது. விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்தே அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு பௌர்ணமி தினத்தில் மிஹிந்தலை புனித பூமியில் ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஆணைக்குழு நாடு முழுவதும் ஈராண்டுகளுக்கு அதிக காலம் ஆதாரங்களை திரட்டி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் ஜகத் சுமதிபால அவர்களினால் ஆணைக்குழு அறிக்கை கௌரவ பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் பௌத்த உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி பாலித பெர்னாண்டோ அவர்கள் உள்ளிட்ட ஆணைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதனுடன், நவீன பௌத்த மத வரலாறு மற்றும் பௌத்த மாநாடுகளின் நூற்றாண்டு மலரும் பிரதமருக்கு வழங்கப்பட்டது.
இலங்கையின் பாரம்பரியம் அனைவருக்கும் சொந்தமானது என சுட்டிக்காட்டிய புதிய சிஹல ராவய தேசிய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர், இந்நாட்டின் தொல்பொருள் மதிப்புகளை தமிழ் மொழிக் கல்வியில் சேர்ப்பது குறித்து ஆராயுமாறு பிரதமரிடம் இதன்போது கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய பாரம்பரியம் குறித்த அத்தியாயத்தை தமிழ் மொழிக் கல்வியில் இணைப்பது குறித்து ஆராய்ந்து அறியத்தருமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்களுக்கு பணித்தார்.
இதன்போது பௌத்த உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான சந்திர நிமல் வாகிஸ்ட, பேராசிரியர் நிமல் சில்வா, விசேட வைத்திய நிபுணர் நரேந்திர பிந்து, பேராசிரியர் மாலனி மெதகம உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

