தெஹிவளை குண்டு தாக்குதலின் பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது
கடந்த 11ஆம் திகதி அதிகாலை தெஹிவளை, சிறி சங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி, 11 மற்றும் 17 வயதுடைய மாணவர்கள் இருவரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கான கைக்குண்டை ஏற்றிச் சென்று, துப்பாக்கிச் சூடு நடத்தியவரை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்ற 23 வயதுடைய சந்தேகநபரையே மேல் மாகாண தெற்கு திசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
பெல்லன்வில நடைபாதை (Walking Path) பகுதிக்கு அருகில் உள்ள பாலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த இரகசிய முற்றுகையின்போது கைது செய்யப்பட்ட நபர், தெஹிவளை போதியவத்தை வீதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு
காவல்துறை விசாரணைகளில் வெளிவந்துள்ள திடுக்கிடும் தகவல்களின்படி, இந்த கொலை ஒப்பந்தம் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் 'கொஸ் மல்லி' மற்றும் 'களுபோவில அவிஷ்க' ஆகிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களால் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களின் ஆலோசனையின் பேரில், களுபோவில அவிஷ்கவின் மாமா என்பவரால் வெறும் 75,000 ரூபாய் பணத்திற்காக இந்த சந்தேகநபரிடம் குண்டை கடத்தும் மற்றும் முச்சக்கரவண்டியை ஓட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின்படி, சந்தேகநபர் 10ஆம் திகதி இரவு அத்திடிய பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரை முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு நுகேகொடையில் உள்ள விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் கிடைத்த உத்தரவின்படி, பெப்பிலியானவில் உள்ள கடை ஒன்றிற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டை எடுத்து வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் 11ஆம் திகதி அதிகாலை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அருகில் வைத்து, இலக்கு வைக்கப்பட்ட வீட்டை அடையாளம் காட்டுவதற்காக வந்த இடைத்தரகர் ஒருவரின் வழிகாட்டலின் கீழ் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் இருவர் பலி
எனினும், குற்றவாளிகளின் இலக்கு தவறியதால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அப்பாவி பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்தார்.

தாக்குதலின் பின்னர் சந்தேகநபர்கள் பாதுக்க, பகுதிக்குச் சென்று முச்சக்கரவண்டியை கைவிட்டு, கண்டி, பிபிலை மற்றும் புவக்பிட்டிய ஆகிய பகுதிகளுக்குத் தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர்.
இச்சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் வீட்டை அடையாளம் காட்டியவர் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களிடம் பெறப்பட்ட இரகசிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இந்த மூன்றாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |