மாணவனை கன்னத்தில் அறைந்த அதிபர் - கிளிநொச்சியில் சம்பவம்
காலைநேர ஆராதனை கூட்டத்தில் அனைத்து மாணவர்கள் முன்னிலையில் பாடசாலை அதிபர், மாணவன் ஒருவனை கன்னத்தில் அறைந்த சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தரம் எட்டில் கல்விபயிலும் குறித்த மாணவனின் வீட்டிற்கு அருகிலிருந்து சிறுவர் இல்ல மாணவர்களை ஏற்றிச் செல்லும் சிற்றூர்தியில் குறித்த மாணவனும் பாடசாலைக்கு செல்வது வழமை என தெரியவருகிறது.
காலை ஆராதனை

இந்த நிலையில் கடந்த 29ஆம் திகதி பாடசாலையில் இடம்பெற்ற காலை ஆராதனையின் போது ஒலி பெருக்கியில் மாணவனை அழைத்த அதிபர், அனைத்து மாணவர்களின் முன்னிலையில் சிறுவர் இல்ல பேருந்தில் நீ வரக் கூடாது எனத் தெரிவித்து கன்னத்தில் அறைந்துள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி

எனது மகனை தினமும் குறித்த பேருந்தில் அனுப்புவது பொருளாதார நெருக்கடி மிக்க சூழலில் எனக்கு நன்மையாக இருந்தது. இதனால் நான் தொடர்ந்தும் குறித்த பேருந்தில் அனுப்பியிருந்தேன். இதன்காரணமாக காலை ஆராதனையில் தான் சொல்லியும் கேட்கவில்லை என்ற காரணத்தினால் எனது மகனை அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் அதிபர் கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட தொடர்ச்சியான வலி காரணமாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு சிகிச்சைக்காக விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளார் என மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.