ஐரோப்பிய ஒன்றியம் தலையீடக் கோரி கைதிகள் குழு ஆர்ப்பாட்டம்
கைதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்க ஐரோப்பிய நாடாளுமன்றம் தலையிடக் கோரி வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையின் மீதேறி கைதிகள் குழு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தம்மை விடுவிக்கக் கோரி ஒக்டோபர் 12ஆம் திகதியான நேற்றுமுன்தினம் கைதிகள் குழு நடத்திய போராட்டம் 22 நாட்கள் கடந்துவிட்டதாக கைதிகளின் உரிமைகளுக்காக செயற்படும் குழு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் நவம்பரில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை மீள்பரிசீலனை செய்வதால், சிறிலங்காவின் மனித உரிமைகள் பதிவை ஆய்வு செய்த பின்னர், கைதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றம் தலையிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு, கைதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாகத் தலையிடவும்" என போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் வைத்திருந்த வெள்ளை நிற பதாகையில் எழுதப்பட்டிருந்தது.
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல இளைஞர்களை விடுவித்ததாக அரச தலைவர் ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்த மறுநாளான செப்டம்பர் 20ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
கைதிகளின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலளிக்க இயலாது எனக் கூறும் சிறைச்சாலைகள் திணைக்களம், கடந்த மாதம் சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சிற்கு கைதிகளின் கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.