அடுத்தவாரம் முதல் முடங்கவுள்ள தனியார் பேருந்து சேவை - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் உள்ள அனைத்து தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்தப்படாவிடின், அடுத்த வாரம் முதல் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்படும் ஆபத்துக் கொண்டவர்கள் என்ற வகையில் தடுப்பூசி மருந்தை தமது ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என இரண்டு மாதங்களுக்கு முன்னரே கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு நேரடியாகவே இந்த கோரிக்கையை தாம் விடுத்துள்ள போதிலும் தமது கோரிக்கை கருத்தில் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களைப் போன்று முன்னுரிமை அடிப்படையில் பேருந்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி மருந்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.