ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி! நிஷாம் காரியப்பருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை கேள்வி எழுப்புவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உயர் மட்டக் குழுவில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாகக் கூறப்படும் அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் வெளியிட்டதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அமைச்சர்களின் குற்றச்சாட்டு
இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்கள் விஜித ஹேரத் மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோர், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதன்படி, எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பருக்கு எதிராக ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை கேள்வி எழுப்பி, சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி
நாடாளுமன்ற உயர்மட்டக் குழுவின் அனுமதியின்றி பொது விடயங்களை வெளிப்படுத்துவது கடுமையான குற்றம் என்றும், நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாகவும் ஆளும் கட்சியின் பல உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியை அடையாளம் கண்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் வெளியிட்ட அறிக்கை தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் மேற்கண்ட செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
