குற்றமிழைத்த அனைவருக்கும் உச்சபட்ச தண்டனை - பாகிஸ்தானிய பிரதமர் உறுதி
பாகிஸ்தானில் இலங்கைப் பணியாளர் ஒருவர் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், குற்றமிழைத்த அனைவருக்கும் எதிராக குற்றவியல் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுத்து உச்ச தண்டனை வழங்குவதாக பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் உறுதியளித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தப் படுகொலையானது மிக மோசமான கொடூரச் செயல் எனவும் இதனை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் (G.L.Peris) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“பாகிஸ்தானில் இடம்பெற்ற இந்தப் படுகொலையானது மிக மோசமான கொடூரச் செயலாகும். இந்தச் செயலை முழு அரசாங்கமும், முழு பாகிஸ்தான் மக்களும் இந்தக் கொலையை கண்டிப்பதாக பாகிஸ்தானிய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சு எமக்கு அறிவித்துள்ளது.
பிரியந்த குமார 11 வருடங்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 9 வருடங்களாக அவர் படுகொலை செய்யப்பட்ட சியால்கோட் நகரிலேயே வசித்து வந்துள்ளார். அவருக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும், முறைப்பாடுகளும் பதிவாகியிருக்கவில்லை. அவர் ஏதாவது ஒரு கடவுளுக்கு எதிராக எவ்வித கருத்துக்களையும் வெளியிட்டிருக்கவில்லை. அவ்வாறு குறிப்பிடுவது பொய்யான குற்றச்சாட்டாகும்.
இந்த கொலையுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாகிஸ்தானிய அரசு தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 120 பேரில் 13 பேர் மிக முக்கிய சந்தேக நபர்கள் எனவும் அவர்களுக்கு எதிராக சட்டத்தின் ஊடாக கொடுக்கககூடிய உச்ச தண்டனை வழங்கப்படும் எனவும் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் அரச தலைவர் மற்றும் என்னிடம் தொலைபேசி ஊடாக உறுதியளித்துள்ளனர்” என்றார்.