நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது விவகாரம்...! எதிர்ப்புகளுக்குப் பின்னால் அரசியல் சதி - ஆரம்பமாகும் விசாரணை
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளுக்குப் பின்னால் ஏதேனும் அரசியல் சதித்திட்டம் உள்ளதா என்பது குறித்து அரசாங்கத்தின் உளவுத்துறையினர் விசேட விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எதிர்ப்புகளுக்கு ஏதேனும் ஒரு தரப்பிலிருந்து அழுத்தங்களோ அல்லது தூண்டுதல்களோ வழங்கப்படுகிறதா என்பது குறித்துக் கண்டறிந்து அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதே இந்த விசாரணையின் முதன்மை நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் நபர்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் குறித்து உளவுத்துறையின் பல குழுக்கள் தற்போது தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டத்தரணிகள் சமூகம்
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் தீர்மானத்தைத் தொடர்ந்து சட்டத்தரணிகள் சமூகம் மற்றும் நீதித்துறை அமைப்பினுள் ஒருவித பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இது தொடர்பாக இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் (BASL) முன்வைத்துள்ள யோசனைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கை
அத்தோடு, எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பான செய்திகள் மற்றும் கருத்துக்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நீதித்துறையில் உருவாகியுள்ள இந்த நெருக்கடி நிலைமை குறித்து எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் பலமாகக் குரலெழுப்ப எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மற்றும் செயற்பாடுகள் குறித்து இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்த எதிர்கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |