புதிய அரசியலமைப்பு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை எதிர்வரும் ஜுலை மாதத்திற்கு முன்னர் கிடைக்கும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அரச தலைவர் அமரர் ஜே.ஆர் ஜயவர்தனவைப் போல நாடாளுமன்றத்தில் எந்த உறுப்பினரையும் அச்சுறுத்தி அரசியலமைப்பை தற்போது அரசாங்கம் உருவாக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், எமது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில் முக்கியத்துவம் பெறுகின்ற ஒன்று தான் புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணியாகும்.
43 வருடங்களுக்கு முன்னதாக தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பே இன்றும் அமுலில் உள்ளது. 4 தசாப்த காலங்களில் இலங்கைச் சமூகம் பரந்தளவில் மாற்றமடைந்துள்ளது. அதனால் அரசியலமைப்பின் தொகுதிகளை அல்ல. ஒட்டுமொத்த யாப்பினையும் ஆழமாக ஆராய்ந்து பூரணமாக அரசியலமைப்பினை உருவாக்குவது தற்காலத்தேவை என்பதை அறிகின்றோம்.
அதனால் தான் முதற்கட்ட நடவடிக்கையாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அரசாங்கம் நியமிக்கப்பட்டுள்ளது.
ஜுலை மாதத்திற்கு முன்னதாக நிபுணர் குழு தனது அறிக்கையை அரசாங்கத்திற்கு கையளிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
நாடாளுமன்றத்தில் இதுகுறித்து அமைக்கப்படவுள்ள தெரிவுக்குழுவில் அனைத்து கட்சிகளும் உள்ளீர்க்கப்படும்.
கட்சியின் தலைவர்கள் மக்கள் ஆணையை மதித்து இப்பணிகளுடன் இணைவார்கள் என நம்புகின்றேன்.
ஜே.ஆரைப் போல எந்த உறுப்பினர்களையும் அச்சுறுத்தி அரசியலமைப்பை உருவாக்க மாட்டோம் என்றார்.