தேர்தல் பிரசாரத்திற்கு டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த தடை
தேர்தல் பிரசாரத்திற்கு டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது எந்த ஒரு மாவட்டத்திலோ அல்லது நகரத்திலோ டிஜிட்டல் திரையைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வது சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணையம்(election commission) தெரிவித்துள்ளது.
அவ்வாறான பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க(Saman Sri Rathnayake) தெரிவித்தார்.
முற்றிலும் சட்டவிரோதமான செயல்
"உங்கள் மாவட்டம் அல்லது நகரத்தில் எந்த வகையான தேர்தல் பிரசாரத்திற்கும் டிஜிட்டல் திரை பயன்படுத்தப்பட்டால், தயவுசெய்து அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கவும். அதன்பிறகு அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இது முற்றிலும் சட்டவிரோதமான செயல். விளம்பரங்களுக்கு பணம் செலுத்துவது அல்லது காட்சிப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது, ஏனெனில் இது பொது இடத்தில் சுவரொட்டி ஒட்டுவதற்கு சமம்.
எனவே, டிஜிட்டல் திரையில் விளம்பரங்களை ஒளிபரப்புவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
அதிகரிக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை
எந்தவொரு வேட்பாளரும் தேவையற்ற செல்வாக்கின் மூலம் வாக்குகளைப் பெற முயற்சித்தால், அந்தந்த மாவட்டத்தின் தேர்தல் அலுவலகத்திலோ அல்லது காவல் நிலையத்திலோ முறைப்பாடு செய்யுமாறும் சமன் சிறி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது. வன்முறைச் செயல்கள் தொடர்பான 8 புகார்கள் அவற்றில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவிற்கு நேற்று மட்டும் 78 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதுவரை பெறப்பட்ட 869 புகார்களில் 723 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |