உயிரிழந்த கடற்படை வீரருக்கு பதவி உயர்வு : இந்திய கடற்றொழிலாளர்கள் மீது வழக்கு
இலங்கை(sri lanka)கடல் எல்லையை தாண்டி அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யச் சென்ற போது சிறிலங்கா கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை மற்றும் கடற்படையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த 25ஆம் திகதி, காங்கசன்துறை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய கடற்றொழில் கப்பலை கடற்படையினர் கைப்பற்ற முயன்றபோது ஏற்பட்ட வன்முறையில் கடற்படையின் சிரேஷ்ட மாலுமி ஒருவர் உயிரிழந்தார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
இந்திய கடற்றொழில் கப்பலும் அதில் இருந்த பத்து இந்திய கடற்றொழிலாளர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்டு ஒருவரைக் கொன்ற குற்றத்திற்காக யாழ்ப்பாணம், மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மல்லாகம் நீதிமன்றில் வழக்கு
யாழ்ப்பாணம்(jaffna) நீதவான் உயிரிழந்த கடற்படை சிரேஷ்ட மாலுமியின் பிரேத பரிசோதனையை பார்வையிட்டதுடன், முதுகெலும்பில் ஏற்பட்ட சேதமே மரணத்திற்கான காரணம் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாலுமியின் சடலம் நேற்று (26) காலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், இறுதிக் கிரியைகள் இன்று (27) இப்பாகமுவ பிரதேசத்தில் சிறிலங்கா கடற்படையின் பூரண மரியாதையுடன் மேற்கொள்ளப்படவுள்ளன.
இச்சம்பவத்தில் உயிரிழந்த சிரேஷ்ட மாலுமி பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |