சட்டவிரோத சுருக்கு வலை கடற்றொழிலை தடை செய்யகோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலை கடற்றொழிலை தடை செய்யுமாறும், அதற்கு உடந்தையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் கோரி, கடற்றொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு இலஞ்ச ஒழிப்பு மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டில், இன்று காலை 9 மணியளவில் கல்லடியில் அமைந்துள்ள மாவட்டக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கடற்றொழிலாளர்கள் , கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாதர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, “சட்டவிரோத சுருக்கு வலையைத் தடை செய்”, “மட்டக்களப்பின் கடல்வளத்தை அழிக்காதே”, “சுருக்கு வலைக்கு உடந்தையாக இருக்கும் உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்”, “இலஞ்சம் பெறாத நேர்மையான உத்தியோகத்தர்களை மட்டக்களப்புக்கு நியமி” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |