நல்லூர் பிரதேச சபைக்கு எதிராக யாழில் வெடித்த பாரிய போராட்டம்
யாழ். அரியாலை கிழக்கு பகுதி மக்கள் நல்லூர் பிரதேச சபையின் திட்டமொன்றுக்கு எதிராக பிரதேச மக்கள் ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (08.10.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாரிய எதிர்ப்பு
இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் போராட்ட இடத்திற்கு வரவேண்டும் என தெரிவித்து விதியை வழிமறித்துள்ளனர்.
இதனால் போக்குவரத்து மிகவும் தடைபட்ட நிலையில், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் போராட்ட இடத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது மக்கள் தமது பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில், குறித்த பகுதியில் இனிமேல் குப்பை கொட்டுவதற்கு குப்பை கொட்டும் வாகனங்கள் வந்தால் அந்த வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல எனவும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டக்காரர்கள்
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களினால் தவிசாளரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் போராட்டக்காரர்கள் பேரணியாக சென்று ஆளுனர் செயலகத்திலும் மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.
இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், உலகமெங்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக மக்கள் போராடி வருகின்றனர்.
அரியாலையூர் மக்களாகிய நாமும் நமது ஊரைப் பாதுகாப்பதற்காக நமது அழகிய ஊரின் நிலம், கடல், நீர்வளம் மற்றும் தூயகாற்று போன்ற இயற்கையின் கொடைகளை காப்பாற்றுவதற்காகப் போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
பிரதேச சபை
நல்லூர் பிரதேச சபை, எமது ஊர்மக்களுடன் எந்தவகையிலும் கலந்து பேசாது சூழலை மாசுபடுத்தக் கூடிய குப்பைகளை எமது ஊரில் வீசும் திட்டத்தை ஆரம்பித்திருப்பது எமது ஊர் மக்களால் மட்டு மல்ல இயற்கையையும் மனிதத்தையும் நேசிக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும்.
இயற்கைப் பசளை உற்பத்தி என்ற பெயரில் ஏமாற்றுத்தளமாக எந்த வகையிலும் வகைப்படுத்தப்படாத - மக்காத குப்பைகளை எமது ஊரில் கொட்டி எமது ஊரை குப்பைமேடாக மாற்றும் முயற் சியை நல்லூர் பிரதேச சபை உடனடியாகக் கைவிட வேண்டும்.
எமது இயற்கை வளங்கள் இன்றைய தலைமுறையான எமக்கு மட்டுமானதல்ல, எதிர்கால தலைமறைக்கும் சொந்தமானவையாகும்.
எமது ஊரின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து எதிர்கால சந்த தியிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு நமது தலைமுறைக்கு உண்டு” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





