தமிழ் சமூகத்தை மலினப்படுத்திய பலர் வடக்கு, கிழக்கில்..! நாளை பாடம்புகட்ட அணிதிரளுமாறு அழைப்பு
தமிழ் சமூகத்தை மலினப்படுத்திய பலர் வடக்கு, கிழக்கில்
தமிழ் சமூகத்தை மலினப்படுத்தி ராஜபஷ குடும்ப ஊழல்வாதிகளுக்கு பின்னால் அடகு வைத்து பிழைப்பு நடத்திய பலர் வடக்கு,கிழக்கில் உள்ளனர்.
இவர்களை கேள்விக்கு உட்படுத்தி நிற்பதோடு எமது மக்களையும், இளைய தலைமுறையினரையும் ஊழல்வாதிகளுக்கு பின்னால் திசைதிருப்பி எமது சமூக தன்மானத்தை இழிவுபடுத்தி கேள்விக்குள்ளாக்கியதை மிக வன்மையாக கண்டிப்பதாக தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்
நெருக்கடியான காலகட்டத்தில் ஊடக சந்திப்பை நடத்திய குறித்த அமைப்பு, மாபெரும் கண்டன அமைதிவழி ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் ஒழுங்கு செய்துள்ளது.
நாளை(17) ஞாயிற்றுக்கிழமை காலை 09:30 மணிக்கு மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் இந்த கண்டன அமைதிவழி ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
எனவே, இதில் வடக்கு, கிழக்கில் பிரதிநிதிப்படுத்துகின்ற எமது மக்கள், இளையோர்கள், பொது அமைப்புக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு ஆதரவளிப்பதோடு எமது எதிர்கால தலைமுறையினருக்கான சமூகத்தை வலுப்படுத்தி நிற்குமாறு தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
