காவல் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்திய நபர்...உடன் கைதுசெய்யுமாறு வவுனியாவில் போராட்டம்!
புளியங்குளம் (Puliyankulam) காவல் நிலையத்தில் வைத்து ஒருவரைத் தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி வவுனியா (Vavuniya), புளியங்குளம் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இன்று (06) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளான நபர் உட்பட 40 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் 'காவல்துறையினர் பக்கச்சார்பாக செயற்படாது குழாய் கிணறு ராசனை கைது செய்', 'காவல் நிலையத்திற்குள் வைத்து தாக்கியவருக்கு பாதுகாப்பு கொடுக்காதே, பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீதும் நடவடிக்கை வேண்டும்' என பல்வேறு கோசங்களை எழுப்பியுள்ளனர்.
காவல்துறையினர் மீதும் விசாரணை
இதனையடுத்து, வவுனியா சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாக 10 பேரை அழைத்து பேசியிருந்தார். இதன்போது காவல் நிலையத்தில் வைத்து தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபரை 3 தினங்களுக்குள் கைது செய்வதாக கூறியிருந்தார்.
அதுமாத்திரமன்றி அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுகப்படும் என்றும் உறுதியளித்துள்ளதுடன் குறித்த சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவித்திருந்தார்,
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலையில் சிகிச்சை
கடந்த மாதம் 15 ஆம் திகதி வவுனியா, சின்னப் பூவரசன்குளம் (Chinna poovarasankulam) பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையை புளியங்குளம் காவல் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய காவல்துறையினர் பிடித்து வைத்திருந்தனர்.
இதன்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த நபர் ஒருவர் காவல் நிலையத்திற்குள் வைத்து அந்த நபரை தாக்கிய நிலையில் பாதிக்கப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |