தென்னிலங்கையில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு கைது- வீதிமறியலில் மக்கள்!
மட்டக்களப்பு பதுளை வீதி தும்பாலம் சோலை கிராம மக்கள் செங்கலடி பதுளை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த நல்லாட்சி காலத்தில் சஜித் பிரேமதாசவால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் பூரணமாக கட்டுமான பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மக்கள் தங்களது பணத்தை செலவு செய்து ஓரளவு சீர் செய்து வாழ்ந்து வந்துள்ளனர் .
காட்டு யானைகளின் அட்டகாசத்துக்கு மத்தியிலும் மின்சார தேவையைக் கருதி மின்சார சபைக்கு பணம் செலுத்தியும் அவர்களுக்கான மின்சார இணைப்புகள் கொடுக்கப்படாத நிலையில் யானைகளிடமிருந்து தங்களது உயிரைக் காப்பதற்காக சட்டவிரோதமாக மின் இணைப்பினை பெற்றுள்ளனர்.
இதை அறிந்த மின்சாரசபை, கொழும்பில் இருந்து வரவழைக்கப்பட்ட உயர் அதிகாரிகளினால், கிராமத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையை கண்டித்தே இன்று காலை கிராம மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

