முற்றுகைக்குள் கொழும்பு - போராட்ட குழுக்கள் விடுத்துள்ள அறிவிப்பு ( படங்கள்)
கொழும்பில் சுகாதார தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இன்று (14) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பேரணியாக அரச தலைவரது செயலகம் வரை சென்றனர்.
இதில் சுமார் 500 இற்கும் மேற்பட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து தாதியர் சங்கம் , நிறைவுகாண் மருத்துவ சங்கம், மேலதிக மருத்துவ சேவைகள் சங்கம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் கடந்த 7 ஆம் திகதி வேலை நிறுத்த போராட்டத்தினை ஆரம்பித்தன.
நாடளாவிய ரீதியில் சுகாதார தரப்பினரால் வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு நேற்றுடன் ஒருவாரம் நிறைவடைந்துள்ள நிலையில், தமது சகல கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் தொழிற்சங்கங்கள் உள்ளன.
எவ்வாறிருப்பினும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவிற்கமைய அரச தாதியர் சங்கம் போராட்டத்திலிருந்து விலகியுள்ள போதிலும், ஏனைய 17 தொழிற்சங்கங்களும் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


