கொழும்பில் வெடிக்கப்போகும் மக்கள் போராட்டம் - எதிரணி முழுமையான ஆதரவு
ஜனநாயகத்திற்கு எதிரான சிறிலங்கா அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 2 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குடிசார் அமைப்புக்களின் தலைவர்களுடன் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாட்டலி சம்பிக்க ரணவக்க மக்கள் போராட்டம் வெகுவிரைவில் கிளர்ச்சியாக வெளிப்படும் எனவும் தெரிவித்தார்.
மக்கள் போராட்டம்
இதன்போது மேலும் தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை குடியுரிமையினை மறைத்து தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்விடயம் குறித்து சபாநாயகர் விரைவான தீர்மானத்தை எடுக்க வேண்டும். உண்மைகளை மறைத்துள்ளமை மக்களாணைக்கு முரணானதாகும். நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மக்கள் போராட்டம் கிளர்ச்சியாக வெளிப்படும்.
எரிபொருள், எரிவாயு விநியோக கட்டமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளது, இனி எந்த பிரச்சினையும் இல்லை என அரசாங்கம் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.
பொருளாதார பாதிப்பு
மக்கள் தமது தொழிற்துறை மற்றும் சேவை நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இதனால் பொருளாதார பாதிப்பு வெகுவிரைவில் பன்மடங்கு தீவிரமடையும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கம் நாட்டு மக்களை அச்சுறுத்துகிறது. அரசாங்கத்திற்கு எதிராக போராடுபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் இடம்பெறுவுள்ள போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்” என்றார்.
