வடக்கு கிழக்கில் எதிர்ப்பு போராட்டங்கள்! பெருமளவில் திரண்ட மக்கள்(காணொளி)
இரண்டாம் இணைப்பு
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மன்னார்
சிறிலங்காவின் முப்படைகளால் யுத்ததிற்கு முன்பும் யுத்ததிற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம் மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி இடம் பெற்றது.
வடமாகாணம் முழுவதும் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், பொது அமைப்புக்கள், குடிசார் அமைப்புக்கள், சட்டத்தரணிகள், அருட்தந்தையர்கள் உட்பட பலர் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் ஆரம்பமான இப்போராட்டம் மன்னார் சுற்று வட்டப் பாதை ஊடாக தபாலகம் வைத்திய சாலை ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைந்தது.
குறித்த போராட்டதில் ஈடுபட்டவர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது கோரிக்கை
மட்டக்களப்பு
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான, நீதி கோரிய ஜனநாயகப் போராட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்திலும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்ட பேரணி காந்திப்பூங்கா வரை நடைபவனியாக சென்றடைந்தது. அதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.
திருகோணமலை
இதேவேளை, திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா கருத்து தெரிவிக்கையில், சர்வதேசம் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டு இருப்பதாகவும், சர்வதேசம் தொடர்ச்சியாக மௌனமாகவும், இறந்தது போன நிலையில் இருப்பதை அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவானது இலங்கையின் பரவலான பகுதிகளில் தங்களது முதலீடுகளை மேற்கொண்டு வரும் இச் சந்தர்ப்பத்தில், தங்களுடைய உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்திலும் கவனம் செலுத்தி இலங்கை அரசுக்கு அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் விடுத்தார்.
யாழ்ப்பாணம்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்ட பேரணி யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கப்பட்டது
யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம் யாழ். முனியப்பர் கோவிலடி வரை பேரணியாகச் சென்று நிறைவுபெற்றது.
வவுனியா
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினரால் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முதலாம் இணைப்பு
வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஒன்றிணைத்து இன்று (30) மன்னாரில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சர்வதேச காணாமல் போனோர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், இப்போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆதரவுக்கான கோரிக்கை
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைத்து இந்தப் போராட்டம் மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், பல தரப்பும் தமது ஆதரவுகளை கடந்த நாட்களில் வழங்கி, இன்றைய போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டமானது மன்னார் 'சதொச' மனித புதைகுழியிலிருந்து ஆரம்பித்து பவனியாக மன்னார் நகர சபை பொது விளையாட்டு மைதானத்தை சென்றடையவுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 14 வருடங்களாக நீதிக்காக போராடும் தாய்மார்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ளனர்.
YOU MAY LIKE THIS