யுத்தம் முடிவடைந்த பின் கையில் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே? காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் போராட்டம்
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (08) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு உடை அணிந்து கையில் கறுப்பு பட்டி அணிந்திருந்தனர்.
சர்வதேச மகளிர் தினம் எமக்கு கறுப்பு தினம், இராணுவத்தின் உறுதி மொழியையடுத்து ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே, எங்கே எங்கே உறவுகள் எங்கே, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், அடக்காதே அடக்காதே பெண்களை அடக்காதே, சிதைக்காதே சிதைக்காதே பெண்களை சிதைக்காதே போன்றவாறான கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
அடிமைச் சங்கிலியை உடைத்தெறிவோம், குடும்பங்களாக சரணடையும் போது அவர்களுடன் சேர்ந்து சரணடைந்த 29 இற்கு மேற்பட்ட குழந்தைகள் எங்கே? , யுத்தம் முடிவடைந்த பின் கையில் ஒப்படைக்கப்பட்ட பெண் பிள்ளைகளை என்ன செய்தீர்கள்? போன்றவாறான பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.



