எங்களை தனித்தனியாக பிரித்தாள முடியாது என்பதை நடைபவனி காட்டுகின்றது - கோட்டாபயவுக்கு பதிலடி கொடுத்த சுமந்திரன்
சிறுபான்மை மக்கள், தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட பேரணியேயன்றி, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பேரணியல்ல என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவனியில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், சிறுபான்மை மக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையை கண்டித்தும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காகவே இந்தப் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவனி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணி பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். இந்நாட்டில் சிங்கள, பௌத்த மக்களுக்கு இருக்கும் சகல உரிமைகளும் தமிழ் பேசும் மக்களாகிய எங்களுக்கும் உண்டு. ஏனெனில் நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள் என்றாலும் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுதந்திரதின நிகழ்வில் பேசும்போது நான் சிங்கள பௌத்தன் என்று தெரிவித்தார்.
மேலும் அவர், அவ்வாறு கூறியது எங்களுக்கு பிரச்சினை இல்லை. எனினும் இந்நாட்டின் ஜனாதிபதி, பெரும்பான்மை மக்களுக்கும் மாத்திரம் சேவையாற்றுவேன் என்று தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எங்களுக்கும் இந்நாடு சொந்தமானது. நாங்களும் வசிக்கின்றோம். அதேபோன்று பெரும்பான்மை மக்களும் இந்நாட்டில் வசிப்பதற்கான உரிமை உள்ளது. எங்களின் உரிமைகளை அகற்றமுடியாது.
இதன் அடிப்படையில், நாங்கள் இந்த நடைபவனியை மேற்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.