திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூரில் வெடித்தது போராட்டம்
மன்னாரிலும் போராட்டம்
செய்தி, படங்கள் - நயன்
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து மன்னாரில் போராட்டம் ஒன்று இன்று(28) திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலையடிக்கு முன்பு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், காவல்துறையின் செயலைக் கண்டித்தும், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதய சந்திரா,சங்க பிரதிநிதிகள்,மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மாக்கஸ் அடிகளார்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முதலாம் இணைப்பு
தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூரில் இன்றுமாலை கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது.
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபிக்கு முன்னால் நடைபெற்ற போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
சிலை மீள வைக்கப்படும் வரை போராட்டம் தொடரும்
சிலை மீள வைக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் சம நேரத்தில் குறித்த போராட்டம் நடைபெற்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




