மேய்ச்சல் தரை உரிமை கோரி மட்டக்களப்பில் வெடித்த மாபெரும் மக்கள் போராட்டம்!
மயிலத்தமடு - மாதவனை உட்பட கிழக்கு மாகாணத்தின் மேய்ச்சல் தரைகளை மீட்டுத் தரக்கோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று (02.11.2026) காலை10 மணியவில் இந்தப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
மயிலத்தமடு, மாதவனையில் தொடர்ந்துவந்த இந்த மேய்ச்சல் தரைப் பிரச்சினை தற்போது திருகோணமலையிலும் உருவெடுத்துள்ள நிலையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்
இதன்போது, மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பை உடன் நிறுத்து, நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்து, எமது மேய்ச்சல் நிலங்களை எமக்கு தா போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் தவத்திரு வேலன் சுவாமிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் செ.கஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் இ.சிறிநாத், ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றம் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாதவனை மற்றும் மயிலத்தமடு புல்மேடு பகுதிகளை நம்பி வாழும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் மதத் தலைவர்கள் தங்களது கடுமையான கவலைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


