சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்கு கடும் எதிர்ப்பு: போராட்டத்தில் குதித்த மக்கள்
தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தரப்பினர் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்த நிலையில், தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் தேர்வுக் குழு மீது கடும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில், தற்போதைய கிரிக்கெட் நிர்வாகிகளும் தெரிவுக்குழுவும் உடனடியாக தமது பதவிகளை விட்டு விலக வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நேற்று (03) அறிவித்திருந்தார்.
கவனயீர்ப்பு போராட்டம்
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக இன்று(04) காலை பல தரப்பினரும் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பின்னர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியெற்றியுள்ளனர்.
அத்தோடு, இலங்கை கிரிக்கெட் நிறுவன வளாகத்தின் பாதுகாப்பிற்காக இலங்கை காவல்துறையின் கலகத் தடுப்புப் பிரிவும் வரவழைக்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி
அதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளராக பணியாற்றிய மோகன் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் செயற்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார்.
அத்தோடு, ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு ஏற்கனவே ஆறு அணிகள் தகுதி பெற்றுள்ளதுடன், மேலும் இரண்டு அணிகள் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு தகுதி பெற வேண்டியுள்ளது.
இந்நிலையில், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை அணி இன்னும் தகுதி பெறவில்லை, தகுதி பெற வேண்டுமானால், பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.