யாழில் வெடித்த போராட்டம்! இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2,400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம் இன்று இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காணிகளை விடுவிக்க கோரி நேற்றையதினம் மயிலிட்டி சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் இன்று 500ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு அவ்விடத்தை விட்டு நகராமல் அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்றைய தினம் ஞாயிறு விடுமுறை என்பதால் பாடசாலை சிறுவர்கள், தமது நிலங்களிலே மூன்றாம் தலைமுறையாக உரிமை கேட்டு பெற்றோருடன் பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டோர்
குறித்த போராட்டத்தில் மயிலிட்டி, பலாலி, அந்ரனிபுரம், காங்கேசன்துறை உள்ளிட்ட காணிகளை சேர்ந்த வயோதிபர்கள் இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற மக்கள் யுத்தம் நிறைவடைந்து தமது காணிகளுக்கு வந்த பின்னரும் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் காணிகளை விடுவிப்பதாக கூறி சிறு சிறு இடங்களை மாத்திரம் விடுவித்துள்ளன.
ஆனால் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இதனால் வாடகை வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் முகாம்களிலும் இன்றுவரையும் காணி சொந்தக்காரர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அனைத்து காணிகளையும் உடனடியாக விடுவிப்போம் என்ற வாக்குறுதிகளை வழங்கி, ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களை கடந்த பின்னும் பெரிய அளவில் காணி விடுவிப்பில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்ணீருடன் கூறினர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக காணிகள் வைத்திருப்பதாக கூறுகின்ற இராணுவம் தற்போது மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகிய நிலையிலும் அவர்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் வைத்திருப்பது மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழும் நிலைக்கு உட்படுத்துவதாகவே தாம் உணர்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். எனவே தமிழ் மக்கள் மத்தியில் அதிக அக்கறை கொண்டுள்ளோம் எனக் கூறுகிற புதிய அரசாங்கம் குறித்த போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - வலிகாமம் வடக்கிலுள்ள 2,400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது.
காணி உரிமையாளர்களால் மயிலிட்டிச் சந்தியில் இன்று (21) குறித்த அமைதிவழிப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்ற காணிகளை விடுவிக்க கோரியே போராட்டம் நடைபெறுகின்றது.
உயர் பாதுகாப்பு வலயம்
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், ”மக்களின் விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் மற்றும் தொழில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு காணிகள் யுத்தம் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகிறது.
ஆனால் யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னராக ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் மக்கள் காணிகளை படிப்படியாக சிறிய சிறிய துண்டுகளாக விடுவித்தனர்.
இருப்பினும் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் சுயமாக தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் 2400 ஏக்கர் காணிகளையும் முழுமையாக விடுவிப்பதன் மூலமே எமது வாழ்வியலை முன்னெடுக்க முடியும்” என தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




