பிரான்ஸ் முழுவதும் தீவிரமடைந்த போராட்டத்தால் 2000 பேர் கைது
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் மோசமான நிலைமைகளைக் கண்டித்து பிரான்ஸ் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின்போது, வன்முறையில் ஈடுபட்ட குழுக்கள் காவல்துறையினருடன் மோதியதுடன், வர்த்தக நிலையங்களையும் சூறையாடியுள்ளன.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் குறைந்தது 2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், உயர்மட்ட அரச அதிகாரிகளுடன் அவசரக் கூட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும், அதன் பின்னர் இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சர்
சில பகுதிகளில் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

“போராட்டம் நடத்துவதற்கான உரிமை ஓர் அடிப்படை உரிமையாகும். ஆனால், வன்முறையின் மூலம் திட்டமிட்டுக் கூட்டாகக் குழப்பத்தை ஏற்படுத்துவது அந்த உரிமைக்குள் அடங்காது” என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லோரன்ட் நூனெஸ் தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாரிஸ், மார்செய், லியோன் மற்றும் போர்டோ உள்ளிட்ட நகரங்களில் நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரிகளின் தகவல்களின்படி, பிரான்ஸ் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 5 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
எனினும், போராட்ட ஏற்பாட்டாளர்கள் இந்த எண்ணிக்கை சுமார் 8 இலட்சம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சமூக அநீதிக்கு எதிராக 2018ஆம் ஆண்டு உருவான 'மஞ்சள் அங்கி' இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்த விரும்பும் தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த வன்முறை போராட்டத்தில் மாரடைப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாரிஸ் காவல்துறையினர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
எனினும், உயிரிழப்பு தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |