ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இன்று புலம்பெயர் மக்களின் நீதிப் பேரணி(படங்கள்)
அனைத்துல அரங்கில் நீதிகோரும் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் வரிசையில் இன்று பகல் பெல்ஜிய தலைநகர் பிரெசெல்சில் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய ஆணைய முன்றலில் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் உரிமைக்காக எழு தமிழா என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயணித்திருந்தனர்.
கவனயீர்ப்பு போராட்டம்

தமிழ்மக்கள் மீதான முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு பின்னரும் தமிழர் தாயகத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் ஒடுக்குமுறைகளை நிறுத்தக்கோரியும் பெல்ஜியத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இன்று பகல் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.
தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டிலும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடனும் மத்திய ஐரோப்பிய நேரம் காலை 11 மணியளவில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியிருந்தது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உரிமைக்காகவும், நீதிக்காகவும் கொட்டொலிகளை எழுப்பியிருந்தனர்.
இந்தப் போராட்டம் ஆரம்பமாக முன்னர் போராட்ட ஏற்பாட்டாளர்கள் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.
கட்டமைப்பு சார் இனவழிப்பு

இந்தச் சந்திப்பில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டு வரும் கட்டமைப்பு சார் இனவழிப்பு குறித்து அங்குள்ள அதிகாரிகளுக்கு ஆதாரங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் பிரித்தானியா, சுவிஸ், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பலர் பங்கெடுத்திருந்தமை நீதிக்கான பயணத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்ததியதாக போராட்டத்தில் பங்கேற்ற உணர்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.