மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் சரியான திகதி தொடர்பில் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து தெளிவான பதிலை எதிர்ப்பார்ப்பதாக பஃப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது.
பஃப்ரல் (PAFFREL) அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி நேற்றைய தினம் (13.10.2025) தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்களை நீண்ட காலத்திற்கு ஒத்திவைக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லை நிர்ணயம்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “அரசாங்கம் பழைய முறையைப் பயன்படுத்தி தேர்தலை நடத்த முடியும், சிறிய திருத்தங்களை மட்டுமே செய்ய வேண்டும்.
அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தனது அமைப்பு கலந்துரையாடியதாகவும், குறுகிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமானால் பழைய முறையிலேயே செல்ல ஒப்புக் கொள்ளப்பட்டதால், அது தொடர்பில் அரசாங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டது.
புதிய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டால், நான்கு மாதங்களுக்குள் எல்லை நிர்ணய செயல்முறையை முடிக்க சிறிய திருத்தங்கள் முன்மொழியப்பட வேண்டும்.
அந்த நான்கு மாதங்களுக்குள் அது செயல்படுத்தப்படாவிட்டால், பழைய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரங்களை வழங்கும் ஒரு பிரிவும் திருத்தத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
இல்லையெனில், திகதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்திவைப்பது நல்லது.
எனினும், எதிர்வரும் ஆண்டு முதல் ஆறு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் புரிந்து கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்," என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
