உயிர்க்கொல்லி போதையை ஒழிக்க பொதுமக்கள் கைகோர்க்க வேண்டும் : வடக்கு ஆளுநர்
உயிர்கொல்லி போதைப்பொருளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைத் தனித்து முப்படையினர் மற்றும் காவல்துறையினர் மாத்திரமே மேற்கொண்டுவிட முடியாது. இந்த நடவடிக்கையில் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
'முழுநாடுமே ஒன்றாக' எனும் தேசிய செயற்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மாவட்டச் செயற்பாட்டுக் குழுவை உருவாக்குவதற்கான கிளிநொச்சி மாவட்டக் கலந்துரையாடல் நேற்று (14.01.2026) காலை நடைபெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது நாட்டில் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையால் இளம் சமுதாயம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வளவோ குடும்பங்கள் தங்களின் வாழ்க்கையைத் தொலைத்துள்ளன. அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
தனியான புனர்வாழ்வு நிலையம்
இந்நிலையில், ஜனாதிபதியின் தலைமையில் உயிர்கொல்லி போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதுக்குத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாகவே பிரதேச மற்றும் மாவட்ட மட்டக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுகின்றன.

அதேவேளை, போதைக்கு அடிமையானவர்களை மீட்பதுக்குரிய செயற்றிட்டமும் அவசியமானது. வடக்கு மாகாணத்தில் இதற்கெனத் தனியான புனர்வாழ்வு நிலையம் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கே அனுப்பப்படுகின்றனர். அங்கும் போதிய இடவசதி இல்லாத நிலைமை காணப்படுகின்றது.
எனவே, எமது மாகாணத்தில் தனியானதொரு புனர்வாழ்வு நிலையத்தை அமைப்பதுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண சிரேஷட பிரதி காவல்துறைமா அதிபர், பிரதி காவல்துறைமா அதிபர், காவல்துறைமா அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மதத் தலைவர்கள், சமூகமட்டப் பிரதிநிதிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |