கோட்டாபயவின் நோக்கம் வெளிவந்தது
மக்கள் விசத்தை உண்டு இறந்தாலும், தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச செயற்பட மாட்டார். இதன் காரணமாக நாளைய தினம் தேர்தல் நடத்தினால் தோல்வியடைவோம் என்கிறார் கமத்தொழிற்துறை இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச (Shasheendra Rajapaksa).
நெற்பயிர்ச் செய்கைக்காக பதுளை மாவட்டத்தில் முதல் முறையாக சேதனப் பசளைகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“உழவன் என்பவன் சேற்றைக் கழுவிய பின்னர் அரச பதவிக்கும் பொருத்தமானவன் என கேள்விபட்டிருந்தாலும் அண்மைக் கால வரலாற்றில் உழவர்கள் அரசனாகா விட்டாலும் கடனாளிகளாக உள்ளனர்.
விசப் போத்தலை கையில் வைத்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் சேதனப் பசளையில் பயிர்செய்ய முடியாது எனக் கூறி சிலர் ஊர்வலம் செல்கின்றனர். ஆர்ப்பாட்டம் நடத்தும் பலர் யார் என்பது குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் காவல்துறையினர் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் மத்தியில் கமத்தொழிலுடன் தொடர்பில்லாத பலர் இருக்கின்றனர். ஏனையோர் சேதனப் பசளை பயிர்ச்செய்கை பற்றி அணுளவும் அறியாதவர்கள்” என்றார்.
அத்தோடு, தேர்தலில் களமிறங்கும் அரசியல் தலைவர் ஒருவர் எடுக்காத வகையிலான தீர்மானத்தை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.