ரஷ்யாவின் தன்னார்வப் படையினருக்கு தலைமையேற்க : வாக்னர் தளபதிக்கு அழைப்பு விடுத்த புடின்
உக்ரைனில் உள்ள ரஷ்ய தன்னாா்வப் படையினருக்கு தலைமையேற்குமாறு அந்த நாட்டின் தனியாா் துணை இராணுவப் படையான வாக்னரின் முக்கிய தளபதி அண்ட்ரேய் ட்ரோஷெவுக்கு அதிபா் விளாடிமீா் புடின் அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து ரஷ்ய அதிபா் மாளிகை நேற்று (29) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக
உக்ரைனில் உள்ள தன்னாா்வப் படையினரை வழிநடத்துவதற்கு, அண்ட்ரேய் ட்ரோஷெவுக்கு அதிபா் புடின் அழைப்பு விடுத்துள்ளாா்.
புடினின் விருப்பம்
உக்ரைனில் தன்னாா்வப் படைப் பிரிவுகளை உருவாக்கி பல்வேறு போா் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துமாறு ட்ரோஷெவை புடின் கேட்டுக்கொண்டாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், வாக்னா் படைத் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷினின் மரணத்துக்குப் பிறகும் உக்ரைன் போரில் அந்தப் படையினரின் பயன்பாட்டைத் தொடர புடின் விரும்புவது உறுதியாகியுள்ளது.
ரஷ்யாவின் தனியாா் இராணுவப் படையான வாக்னா் குழு, அந்த நாட்டுக்காக ஆபிரிக்கா, சிரியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் போரிட்டு வந்தது.
துணை இராணுவப் படை
அதிபா் புடினின் துணை இராணுவப் படை என்று வா்ணிக்கப்பட்ட வாக்னர் படை , தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் போரில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ரஷ்ய இராணுவத்துக்காக கைப்பற்றிக் கொடுத்தது.
எனினும், இந்தப் போரின்போது இராணுவ தலைமைக்கும், வாக்னா் குழு தலைவா் ப்ரிகோஷினுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், இராணுவ தலைமைக்கு எதிராக வாக்னா் படை கடந்த ஜூன் 23ஆம் திகதி ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டது. இது, அதிபா் விளாடிமீா் புடினின் தலைமைக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது.
வாக்னர் படைத் தலைவர் உயிரிழப்பு
இந்த நிலையில் இரண்டாவது நாளே ஆயுதக் கிளா்ச்சியைக் கைவிடுவதாக ப்ரிகோஷின் அறிவித்தாா். புடினும் ப்ரிகோஷின் மற்றும் கிளா்ச்சிப் படையினருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாகக் கூறப்பட்டது.
இந்தநிலையில் வாக்னா் குழு ஆயுதக் கிளா்ச்சி நடத்தி சரியாக 2 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி, மாஸ்கோவிலிருந்து யெவ்கெனி ப்ரிகோஷின் உள்ளிட்ட 10 வாக்னா் குழுவினருடன் புறப்பட்ட தனியாா் விமானம் விழுந்து நொருங்கி, அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனா்.
இந்த விபத்துக்கு ரஷ்ய அரசுதான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படும் நிலையில், உக்ரைன் போரில் பங்கேற்குமாறு வாக்னா் குழுவின் முக்கிய தளபதிக்கு புடின் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.