முடிவுக்கு வரும் ரஷ்ய - உக்ரைன் போர்.! பெரும் நம்பிக்கையில் புடின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைன் போர் முடிவுக்கு வரப்போவதாக தான் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
மே 9, 2026 அன்று மாஸ்கோவில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரம் ஒரு முடிவை நோக்கி நகர்வதாக தான் நினைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்த மூன்று நாள் போர்நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் புடின் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜெலென்ஸ்கி - புடின் சந்திப்பு
இப்போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் தலா 1,000 கைதிகளைப் பரிமாறிக்கொள்ளச் சம்மதித்துள்ளன.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை நேரடியாகச் சந்திப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த புடின், ஒரு நிரந்தர அமைதி உடன்படிக்கை எட்டப்பட்ட பின்னரே அத்தகைய சந்திப்பு சாத்தியம் என்று கூறியுள்ளார்.
மேலும், ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாராக இருப்பதாகவும், அதற்கு முன்னாள் ஜெர்மனி ஜனாதிபதி கெர்ஹார்ட் ஷ்ரோடர் சிறந்த மத்தியஸ்தராக இருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் இலக்குகள்
உக்ரைனில் ரஷ்யாவின் இலக்குகள் நிறைவேற்றப்படும் வரை தனது நாடு உறுதியாக இருக்கும் என்பதை வலியுறுத்திய புடின், அதேவேளையில் ஐரோப்பாவிற்கான புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தீவிர ஆர்வம் காட்டி வரும் சூழலில், ரஷ்யாவிடமிருந்து கிடைத்துள்ள இந்த சாதகமான பதில் சர்வதேச அளவில் ஒரு முக்கியமான இராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |