மட்டக்களப்புக்கு வந்த லொகான் ரத்தவத்தே: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனிடம் சில கேள்விகள்!!
தமிழ் சிறைக்கைதிகளை முழங்காலில் நிற்கவைத்து அவமானப்படுத்தி சர்ச்சைக்குள்ளாக்கிய பிரதிஅமைச்சர் லொகான் ரத்வத்தே மட்டக்களப்பிற்கு அழைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து, அந்த செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளரை மிரட்டியுள்ளார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.
அநுராதபுர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியற் கைதிகளை முழந்தாலிட வைத்து தலையில் தன்னுடைய கைத்துப்பாக்கியை வைத்து சுடப் போவதாக அச்சுறுத்தியதுடன், அவருடைய சப்பாத்தினை நக்குமாறு மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டவர் லொகான் ரத்வத்தே.
தமிழ் மக்கள் மனங்களில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்திய அந்தச் சம்பவம் நடைபெற்று சரியாக 10வது நாளில் தமிழ் மக்கள் பெருமளவாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு லொகான் ரத்தவத்தே அழைக்கப்பட்டதானது மட்டக்களப்பு தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அந்தச் செய்தியை வெளியிட்டதற்காக ஊடகவியலாளரை மிரட்டிய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனிடம் சில கேள்விகள்:
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனிடம் சில கேள்விகள்:
- அநுராதபுர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியற் கைதிகளை முழந்தாலிட வைத்து தலையில் தன்னுடைய கைத்துப்பாக்கியை வைத்து சுடப் போவதாக அச்சுறுத்தியதுடன், அவருடைய சப்பாத்தினை நக்குமாறு மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டவர் லொகான் ரத்வத்தேயின் செயலை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
- உங்களுக்கு வாக்களித்த மட்டக்களப்பு மக்கள் அதனை எவ்வாறு பார்க்கின்றார்கள்?
- தமிழர் என்ற காரணத்திற்காகவே அந்த i அரசியல் கைதிகளை அவமானப்படுத்திய லொகான் ரத்வத்தேவை நேரில் பார்த்த போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
- ஒரு தமிழராக உங்களுக்கு கோபம் ஏற்படவில்லையா?
- நீங்கள் அங்கம் வகிக்கும் கட்சியைச் சேர்ந்தவர் என்ற நிலையில், உங்களது சக இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் அவரிடம் அந்தச் சம்பவம் பற்றி ஏதாவது கேள்வி எழுப்பினீர்களா?
- உங்களது அதிருப்தியை அல்லது கண்டணத்தை அவரிடம் நேரில் வெளிப்படுத்தினீர்களா?
- அதற்கு முன்பதாக அவர் அவ்வாறு நடந்துகொண்டதில் உண்மையிலேயே உங்களுக்கு அதிருப்தி உள்ளதா?
- தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பிற்கு அழைக்கப்பட்டது அல்லது வந்தது பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன?
- உங்களுக்கு வாக்களித்த மக்கள் அதனை எப்படிப் பார்க்கின்றார்கள்? ரொகான் ரத்வந்தே கலந்துகொண்ட கூட்டத்தில், செங்கம்பளம் விரிக்கப்பட்ட அந்த மேடையில் அவருக்கு அருகே அமர்ந்திருந்த போது எப்படி உணர்ந்தீர்கள்?
- சக இராஜாங்க அமைச்சராக பெருமையாக இருந்ததா? அல்லது ஒரு தமிழனாக அவமானமாக இருந்ததா?
- அரசியல்கைதளை அவமானப்படுத்திய லொகான் ரத்தவத்தை மட்டக்களப்புக்கு அழைக்கப்பட்டதையும், கிழக்குப் பிரதிநிதிகளுடன் அமர்த்தப்பட்டு அவருக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதையும், வடக்கையும் கிழக்கையும் உணர்வு ரீதியாகப் பிரிக்கின்ற சதிக்கான ஒரு அங்கமாக நீங்கள் பார்க்கவில்லையா?
- லொகான் ரத்வத்தேயுடன் நடந்தது அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் என்று கூறுகின்றீர்கள். அப்படியானால் ஏன் ஊடகவியலாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது?
- ஊடகவியலாளர் மீதும், ஊடகம் மீதும் உங்களுக்கு ஏன் கோபம் ஏற்பட்டது?
- தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவேண்டியது ஒரு ஊடகத்தின் கடமை என்பதன் அடிப்படையில் லொகான் ரத்வத்தையின் செய்தியைப் பிரசுரித்த ஊடகத்தின் மீது ஏன் உங்கள் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தீர்கள்?
- லொகன் ரத்வத்தேயின் மட்டக்களப்பு விஜயம் பற்றிய செய்தியையும், அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் யார் யார் கலந்துகொண்டார்கள் என்ற செய்தியையும் ஊடகம் இருட்டடிப்பு செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களா?
- 'செங்கம்பள வரவேற்பு' என்ற சொற்றொடர் சிறந்ததொரு வரவேற்பிற்கான 'சிலேடை வாக்கியம்' என்பது ஒரு பிரபலமான தமிழ் ஆசிரியரான உங்களுக்குத் தெரியாதா?
- மட்டக்களப்பில் இடம்பெறும் மணல்கொள்ளை தொடர்பாக நாமல் ராஜபக்சவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கும், குறிப்பிட்ட அந்த ஊடகவியலாளர் மீது நீங்கள் கோபப்பட்டதற்கும் தொடர்பு இல்லைதானே? (கேள்விகள் தொடரும்...)





