தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை புறக்கணிக்கும் ரணில்: சுமந்திரன் பகிரங்கம்
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க வழங்கும் வாக்குறுதிகள், மக்களை ஏமாற்றும் வகையில் அமைந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இனப்பிரச்சனைக்கான தீர்வை முழுமையாக நிராகரித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் தனது கொள்கை பிரகடனத்தை முன்வைத்ததாக, இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய போது சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொள்கை பிரகடன உரை மீதான ஆர்வம் காரணமாக சிறிலங்கா நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணிலின் நடவடிக்கை
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறுகையில், “சிறிலங்காவின் அதிபராக பதவியேற்றதில் இருந்து நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க ரணில் விக்ரமசிங்க பல தடவைகள் நடவடிக்கை எடுத்தார்.
இதற்கான காரணம் என்னவென்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன், கொள்கை பிரகடனத்தின் மீதான பற்றால் அவர் நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைக்கிறார்.
இதுவரை அவர் கூற வேண்டுமென நினைத்த அனைத்தையும் கொள்கை பிரகடனத்துக்குள் உள்ளடக்கியுள்ளார்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பொது மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர், எனினும் சிறிலங்காவின் அதிபராக தான் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளமை குறித்து அவர் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
அதிபர் தேர்தல்
இந்த வார்த்தைகளில் உண்மை இல்லை. ரணில் விக்ரமசிங்கவின் திறமை காரணமாக தற்போது நாட்டின் நிலை ஓரளவு மேம்பட்டுள்ளதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு நாம் அவரை பாராட்ட வேண்டும்.
தற்போதைய சிறிலங்கா அதிபரின் முயற்சியால் எமக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்ள முடியுமாகியுள்ளது.
எனினும், குறித்த நடவடிக்கை எம்மை மேலும் கடனாளியாக்கும், இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும், இந்த ஆண்டை தேர்தல்களுக்கான ஆண்டு என ரணில் விக்ரமசிங்க பிரகடனப்படுத்தியுள்ளார்.
தேர்தல்களுக்கான திகதியையும் அவரே அறிவிக்கும் நிலையில் இந்த பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக நாடு. சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு அமைய தேர்தல் நடைபெறும் திகதிகள் அறிவிக்கப்பட வேண்டும்.
எனினும், ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலை முதலில் நடத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்! |