மரண தண்டனை கைதியிடமிருந்து மீட்கப்பட்ட தொலைபேசி!
பூஸ்ஸ சிறைச்சாலையில் நேற்று (10.11.2025) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது தெமட்டகொட சமிந்த எனப்படும் கைதி தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையிலிருந்து நவீன கையடக்கத் தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசேட அதிரடிப்படை, பூஸ்ஸ சிறைச்சாலையின் அதிகாரிகள், சிறைச்சாலை அவசர நடவடிக்கை பிரிவு மற்றும் பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் சிறை அறையினுள் சோதனை அதிகாரிகள் சோதனை செய்ய முயற்சிக்கும் சந்தரப்பத்தில், குறித்த கைதி தொலைபேசியை தரையில் அடித்து அழிக்க முயன்றதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசேட சோதனை
இதேவேளை, பூஸ்ஸ சிறைச்சாலையின் 11 ஆம் சிறை அறையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தல்காரரான அப்துல் ரஹ்மானிடம் இருந்தும் கையடக்கத் தொலைபேசியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசிகள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் பாதாள உலகத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான தெமட்டகொட சமிந்த என்பவர் கொலன்னாவை பகுதியில் 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர மற்றும் நான்கு பேரைக் கொலை செய்ததற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் உட்பட பல குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பின் கீழ் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |