ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதியை வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் எதிர்வரும் கார்த்திகை 17ஆம் திகதி செம்மணிச் சந்தியில் முன்னெடுக்கப்படவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"செம்மணி மனிதப் புதைகுழி என்பது வெறும் எலும்புக்கூடுகளின் தொகுப்பல்ல; அது அடையாளம் காணப்பட வேண்டிய மனிதர்களின் வாழ்வும், பதிலுக்காகக் காத்திருக்கும் குடும்பங்களின் கண்ணீரும், வெளிச்சத்திற்கு வர வேண்டிய உண்மைகளுமாகும்.
வரலாறு நம்மிடம் கேட்கும் கேள்வி
மேலும், பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கும், ஆட்சேபனைகளுக்கும் வெளிப்படையானதும் அறிவியல் பூர்வமானதுமான பதில்கள் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீதிக்கான குரல் எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கப்படக் கூடாது.

பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் வெறும் பட்டங்களுக்காக மட்டுமல்லாது, சமூகத்தின் வலிகளையும் புரிந்துகொண்டு மனிதநேயத்திற்கும் நீதிக்கும் மதிப்பளிப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
வரலாறு நம்மிடம் கேட்கும் கேள்விகளுக்கு நமது நிலைப்பாடும் ஒரு பதிலாக இருக்கட்டும்" என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.