ராஜபக்சர்களின் சர்ச்சைக்குரிய கொள்கைப் பிரகடனம் - சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு என்ன?
மனித உரிமைகள் மீறப்பட்டு சிறுபான்மை மக்கள் துன்புறுத்தப்பட்ட ஒரு நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள சர்வதேச நாடுகள் விரும்பப்போவது இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் (நேற்று) பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மனித உரிமைகள் மீறப்படவில்லை, சிறுபான்மை மக்கள் துன்புறுத்தப்படவில்லை என சர்வதேச நாடுகளும், எதிர்க்கட்சிகளும் தெரிவிக்க வேண்டுமே தவிர, அரசாங்கம் அவ்வாறு தெரிவித்துக்கொண்டிருப்பதில் எவ்வித பலனும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“நீதி தாமதமாகியுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் முதலீட்டுக்கான கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பது எனப் பல விடயங்களை அரச தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் பேரவையில் தற்போதைய அரச தலைவர் தெரிவாகி ஒரு வருடத்திற்குள் எமது நாட்டிற்கு எதிராக பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டிருக்கையில் இந்த நாட்டிற்கு எவ்வாறு முதலீட்டாளர்கள் வருவார்கள்.
நீதிமன்ற விடயங்களை சீர்குலைத்து, மனித உரிமை விடயங்களை இல்லாமல் செய்து, சிறுபான்மையினருக்கு துன்புறுத்தல்களை ஏற்படுத்தி இவ்வாறு குற்றச்சாட்டுகள் காணப்படுகின்ற நிலையில் முதலீட்டாளர்கள் இங்கு வருவார்களா?
20 ஆவது திருத்தத்தின் ஊடாக நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இன்று அனைத்து நிறுவனங்களும் அரச தலைவரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. நாங்கள் நாடாளுமன்றத்தில் நீதிமன்றங்களின் சுயாதீனத் தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், மனித உரிமைகள் மீறப்படவில்லை எனவும் குறிப்பிடுவதால் எவ்வித பிரயோசமுனம் இல்லை. யாரும் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
தெரிவுக்குழு ஒன்றின் ஊடாக அரசியல் யாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இன்று ராஜபக்ச குடும்பத்தின் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகிய சட்டத்தரணிகளை அழைத்து யாப்பினை உருவாக்குமாறு தெரிவித்துள்ளனர். இது சரியான விடயமா? நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் பேச்சுகள் இல்லை” - என்றார்.