மகிந்த தொடர்பில் பொன்சேகாவின் சர்ச்சைக்குரிய கருத்து: குற்றம் சுமத்திய விமல்
சரத் பொன்சேகா போன்ற ஒரு மனிதனை இராணுவத் தளபதியாக நியமித்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தலைகீழாக தூக்கிலிட வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவனச் கருத்து வெளியிடும் போதே இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
தண்டனை வேண்டும்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “சரத் பொன்சேகா போன்ற ஒரு “கேவலமான” மனிதனை ஓய்வு பெற 10 நாட்களுக்கு முன்னர் இராணுவத் தளபதியாக நியமித்தமை, மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டிய ஒரு செயல்பாடு தான்.
அத்தகைய அயோக்கியமான ஒருவருடன் போர் புரிந்தமை தொடர்பிலும் மகிந்த ராஜபக்சவை தண்டிக்கப்பட வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா ஆவேசம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சலுகைகளைப் பறித்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
2009 போரின் முடிவு 10 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபோது மகிந்த ராஜபக்ச ஏன் போர்நிறுத்தத்தை அறிவித்தார் என நாட்டுக்கு விளக்க வேண்டும் எனவும் 2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற விடுதலைப்புலிகளுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மற்ற நாடுகளாயின், மகிந்த ராஜபக்ச கடுமையான தண்டனைக்கு ஆளாகியிருப்பார் எனவும் எமது அரசியலமைப்பின் படியும், அவருக்குரிய தண்டனை தூக்குத் தண்டனையே எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
