பிள்ளையானை சந்திக்க பாடுபடும் ராஜபக்சர்கள்: அநுர தரப்பு வெளிப்படை
சிறையில் உள்ள பிள்ளையானை சந்திக்க ராஜபக்சர்களின் தூதராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாடுபடுவதாக ஆளும் கட்சியின் சபைத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) குற்றச்சாட்டியுள்ளார்
அத்துடன், இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான குற்றத்திற்கான மூல காரணத்தை வெளிப்படுத்த பிள்ளையான் (Pillayan) இப்போது காத்திருக்கிறார் என்றும் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொடூரமான குற்றம்
மேலும் கருத்து தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் அதிகாரத்தை இலக்காகக் கொண்ட ஒரு கொடூரமான குற்றம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானை சந்திக்க ராஜபக்சர்களின் தூதராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாடுபடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக இருந்தவர்கள் குறித்த சந்தேகங்களை நிரூபிக்க இராணுவம், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரை வழிநடத்தும் திறன் எங்களுக்கு கிடைக்கவில்லை.
ஒரே நாளில் இடமாற்றம்
ஏனெனில் அந்த குற்றவாளிகள் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களாக இருந்தார்கள்.
இவற்றை அடக்குவதற்காக, குற்றப் புலனாய்வுத் துறையின் 750 அதிகாரிகளை ஒரே நாளில் இடமாற்றம் செய்ய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்பாடு செய்தார்.
இன்று, இது தொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விடயம் இப்போது மிகவும் தெளிவாகியுள்ளது.
விடுதலைப் புலிகள் கொன்றதைக் காட்ட
வவுணதீவில் இரண்டு காவல்துறையினரை விடுதலைப் புலிகள் கொன்றதைக் காட்ட அவர்கள் அந்த அமைப்பின் ஆடைகளை விட்டு சென்றுள்ளனர்.
இதன் பின்னணியில் பிள்ளையான் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இப்போது பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
இதன் காரணமாக விரைவில் உண்மையான குற்றவாளி வெளி வருவார். இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான குற்றத்திற்கான மூல காரணத்தை வெளிப்படுத்த பிள்ளையான் இப்போது காத்திருக்கிறார் என பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
