இலங்கையில் துணைவேந்தர் இன்றி இயங்கும் பல்கலைக்கழகம் :வெடித்தது போராட்டம்
கிட்டத்தட்ட ஒரு வருடமாக பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாத நிலையில் துணைவேந்தரை நியமிக்க கோரி ரஜரட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று (30) ஆர்ப்பாட்டம் மற்றும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
துணைவேந்தர் இல்லாததால், பல்கலைக்கழகத்தின் நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் மாணவர்களின் கல்வித் தேவைகள், கல்வி ஆராய்ச்சி மற்றும் கல்வி நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
போராட்டத்தில் பஙகேற்ற ஆசிரியர்கள்
இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

அதன்படி, இன்று அனைத்து கல்வி, ஆராய்ச்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளிலிருந்தும் அவர்கள் விலகினர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அசண்டையீனம்
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு, ரஜரட்ட பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் துணைவேந்தரை நியமிக்குமாறு பல்கலைக்கழக பேரவையிடம் கோரிக்கை விடுத்திருந்தது. பின்னர், பேரவை துணைவேந்தர் பதவிக்கு மூன்று பேரை பரிந்துரைத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

ஆனால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த விஷயத்தில் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.
வரும் திங்கட்கிழமைக்குள் தீர்வு காணப்படாவிட்டால், விரிவுரையாளர்கள் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |