பாதாள உலக உறுப்பினரிடம் லஞ்சம்! விஜயதாசவின் மகன் உட்பட சரித் அபேசிங்கவுக்கு தொடர் விளக்கமறியல்
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரண தேர்தல் அமைப்பாளர் சரித் அபேசிங்க, மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் அருண வருணஹெந்திக ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிபதி அசங்க எஸ். போதரகம உத்தரவிடத்டுள்ளார்.
ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு உதவி செய்வதற்காக, அவரது மனைவியிடமிருந்து 120 மில்லியன் ரூபாய் பணத்தை லஞ்சமாகக் கோரிப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பிணை கோரி மனு
இந்த வழக்கின் இரண்டாவது சந்தேக நபரின் சட்டத்தரணி ஏற்கனவே பிணை கோரி நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தனது அவதானிப்புகளையும் அவசியமான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
எனினும், முதலாவது மற்றும் மூன்றாவது சந்தேக நபர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான பிணை மனுக்கள் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், இதன் காரணமாக அந்த மனுக்கள் மீதான தங்களின் ஆட்சேபனைகளையும் நிலைப்பாட்டையும் சமர்ப்பிக்க முடியவில்லை எனவும் ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
விளக்கமறியல் உத்தரவு
இதனைக் கருத்திற்கொண்ட நீதிபதி, முதலாவது மற்றும் மூன்றாவது சந்தேக நபர்களின் பிணை மனுக்கள் தொடர்பான தங்களின் எழுத்துப்பூர்வமான ஆட்சேபனைகளையும் நிலைப்பாட்டையும் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், மூன்று சந்தேக நபர்களையும் ஜூலை 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினமே பிணை மனுக்கள் மீதான தீர்ப்பை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |