நாமல் கைது : குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் மொட்டு : அனுராதபுர பேரணி நிறுத்தப்படாது எனவும் சூளுரை
கைதியாக வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தெரிவித்துள்ளது.
ஒரு அறிக்கையை வெளியிட்டு, கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர கரியவசம், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று தமது கட்சி நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு
தொடர்புடைய கடிதத்தில், இந்த நாட்டில் நிகழக்கூடிய ஊழல் அல்லது மோசடியை வேரோடு களைவதற்காகவே இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு உருவாக்கப்பட்டது என்றும், அதை அரசியலுக்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக அல்ல என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள சுதந்திரமான அரச நிறுவனங்கள் தங்களை அரசியல் அச்சுறுத்தல்களுக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்த முற்பட்டால், நாட்டையும் அதன் ஜனநாயகத்தையும் மதிக்கும் அனைத்துக் குடிமக்களும் இந்த விஷயத்தில் கூர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நாமல் கைதின் பின்னணி
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களை ஒன்றிணைப்பதற்காக 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தின் பின்னணியில் இந்தக் கைது கேள்விக்குரியது என்று கட்சியின் பொதுச் செயலாளர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், நாமல் ராஜபக்ச காவலில் வைக்கப்பட்டிருந்த போதிலும், 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மக்கள் கூட்டம் அவர் விரும்பியபடியே நடைபெறும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |