இராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோரிய மனு : இந்திய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையில் அமைந்துள்ள இராமர் பாலத்தை பார்த்து வணங்கும் வகையில் சுவர் எழுப்ப வேண்டும் என கோரி தாக்கல் செய்த பொதுநலன் மனுவை இந்திய உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கைக்கு இடையே கடலில் சுண்ணாம்பு பாறை திட்டுகள் ஒரே தொடர்ச்சியாக அமையப்பெற்றுள்ளன. இதனை புராண இதிகாசங்களுடன் தொடர்புபடுத்தி பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இராமரால் இலங்கைக்கு கட்டப்பட்ட பாலம் என அது கூறப்படுகிறது.
இதனாலேயே இதனை இராமர் பாலம் அல்லது ராம் சேது என அழைக்கின்றனர். அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்படாத நிலையில் சேதுக் கால்வாய் திட்டத்துக்காக இந்த பகுதியை ஆழப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது இராமர் பாலம் சேதமடைந்துவிடும் என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சேதுக்கால்வாய் திட்டம்
இந்த சர்ச்சையின் போதுதான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, இராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்காக கருணாநிதியின் தலையை துண்டிப்போருக்கு பரிசு தரப்படும் என இந்து சாமியார் ஒருவர் அறிவித்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் இராமர் பாலம் இருப்பதைக் காரணம் காட்டியே சேதுக்கால்வாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டு கைவிடப்பட்டது.
இந்தநிலையில் இராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக பாரதீய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பலர் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.
மனுவை தள்ளுபடி செய்த நீதியரசர்கள்
அதனை தொடர்ந்து அண்மைக்காலத்தில், இந்து சட்ட ஆணையம் சார்பில் அசோக் பாண்டே என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், இராமர் பாலத்தை பொதுமக்கள் வணங்கும் வகையில் சுவர் கட்டித்தர உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதியரசர்கள், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதில் தலையிடுவது எல்லாம் நீதிமன்றத்தின் பணியா? என கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக மத்திய அரசை அணுகலாம் எனவும் மனுதாரருக்கு; அறிவுறுத்திய நீதியரசர்கள், குறித்த பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்தனர்.