13வது திருத்தச் சட்டம் தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம் எட்டப்படும் - ஜீவன் தொண்டமான்!
13வது திருத்தச் சட்டம் தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் (26) ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் 13வது அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட மலையக தமிழ் மக்கள் தொடர்பான விடயங்கள் பற்றி கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.
குறித்த கலந்துரையாடல்கள் சாதகமான முறையில் முடிவடைந்ததுள்ளதாக அவர் இந்தியாவில் இருந்து திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தூதுக்குழுவில் நானும் பங்கேற்றிருந்தேன்
"அதிபர் தலைமையில் இந்தியா சென்றிருந்த தூதுக்குழுவில் நானும் பங்கேற்றிருந்தேன், பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்பின் போது, 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல், எரிசக்தி மற்றும் பொருளாதார மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவிலுள்ள இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக 3000 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளார்..
இந்த நிதியினை மலையகத் தமிழர்களின் கல்வி மற்றும் சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக பயன்படுத்துமாறும் மேலும் கூறினார்.
நுவரெலியா மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்தின் கட்டுமான பணிகளிற்கும் இந்தியா நிதியுதவி வழங்கியுள்ளதால் குறித்த பணிகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.