அவசரமாக கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அழைத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் இலங்கை எதிர்கொள்ளும் மிகவும் கடினமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட இவ்வாறு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்கால நடவடிக்கை
ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கடுமையான இயற்கை பேரிடரை வெற்றிகரமாக சமாளித்ததில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

2003 மற்றும் 2016 வெள்ளப்பெருக்கு மற்றும் வெள்ளத்திற்குப் பிந்தைய காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்களுக்கு ரணில் விக்ரமசிங்க விளக்குவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வஜிர அபேவர்தன கூறினார்.
இந்தக் கடுமையான பேரழிவுக்குப் பிறகு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்று கூடுவது இதுவே முதல் முறை எனவும் வஜிர அபேவர்தன கூறினார்.
இதேவேளை, தற்போது நிலவி வரக்கூடிய குறித்த அசாதாரண சூழலில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |