தேர்தல் விவகாரம்! குழப்பத்தில் ரணில்: நாங்கள் தயார் என்கிறார் அனுர
அதிபர் தேர்தலை அல்லது பொதுத் தேர்தலை முதலில் அறிவிப்பதா என்ற குழப்பத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏனைய கட்சிகளை விட தேசிய மக்கள் சக்திக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அனைத்து மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
காலி மாவட்ட மகளிர் மாநாட்டில் நேற்று (07) கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தலை அறிவிப்பதில் குழப்பம்
இதேவேளை, கடந்த காலங்களில் அதிபர் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலை அறிவிப்பதில் தயக்கம் காட்டாத ஆட்சியாளர்கள் தற்போது எந்தத் தேர்தலை முதலில் அறிவிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
“இரண்டு தேர்தல்களில் எதையும் சந்திப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளது. நாட்டை புதிய திசையில் கொண்டு செல்லக்கூடிய புதிய கட்சிக்கு அதிகாரம் மாற்றப்பட வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி
எங்களுடன் போட்டியிடும் குழுக்கள் கூட தேசிய மக்கள் சக்தி ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளன.
அனைத்து அரசியல் கூட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி,பி கட்சிகளே பாடமாக இருந்தன.
ஜே.வி.பி.யால் ஒருபோதும் அரசாங்கத்தை அமைக்க முடியாது என அவர்கள் முன்னர் கூறினர். இப்போது, தேசிய மக்கள் சக்தியால் அரசாங்கத்தை நடத்த முடியாது என்று சொல்லத் தொடங்கியுள்ளனர்,” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |