அதிபர் ரணிலின் யாழ் விஜயம் : காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும்
யாழ்ப்பாணத்திற்கு அதிபர் வரும் வேளை காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றைய தினம்(26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
காணி விடுவிப்பு
“வனவள பாதுகாப்பு, வன ஜீவராசி திணைக்களம் என்வற்றின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் 11 கட்டம் இருந்தது. அதில் 4 கட்டமே பூர்த்தியாகியுள்ளது.
ஏனைய கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் 100 வீதம் சரிவரும் என்ற நம்பிக்கை உண்டு.
உயர்பாதுகாப்பு வலயமாக படைத்தரப்புக்களின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க தொடர்ந்து முயற்சிக்கிறேன், முடிந்த வரையில் காணி விடுவிக்க நடவடிக்கைகளை எடுப்பேன்.
அதிபர் யாழ்ப்பாணம் வரும் வேளையில் காணிகளை விடுவிக்கவோ, அல்லது அது தொடர்பில் பச்சை கொடியை காட்டவோ கூடும்.” என்றார்.
அதிபருடனான சந்திப்பு
அதேவேளை, அதிபருடனான சந்திப்பில் ஏன் கலந்து கொள்ளவில்லை என அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது,
“வடக்கில் எம் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் நிறைய இருந்தமையால் நான் வடக்கில் தங்கி இருந்தேன், அதனால் சந்திப்புக்கு செல்லவில்லை.
அதிபருடன் மக்களுக்காக தொலைபேசியில் கதைக்க கூடிய நிலையில் உள்ளேன். பல்வேறு தடவைகள் கதைத்தும் உள்ளேன்.
என் கட்சி சார்பில், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் கலந்து கொண்டார்.” என பதிலளித்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |