யாரிடமும் அதிபர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கவில்லை : விக்னேஸ்வரன்
“நான் யாரிடமும் அதிபர் வேட்பாளராக களமிறங்கவுள்ளேன் என தெரிவிக்கவில்லை, ஆனால் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் அவ்வாறு கோரிக்கை வைத்தால் அதை செயற்படுத்துவேன் என கூறினேன்.”
இவ்வாறு, தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று(26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தல்
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில்,
“கடந்த வாரம் என்னுடன் சில ஊடகவியலாளர்கள் வந்து உரையாடினார்கள். பல்வேறுபட்ட கேள்விகளை கேட்டார்கள் நான் பதிலளித்திருந்தேன்.
அப்போது தான் அவர்கள், தமிழ் மக்கள் சார்பில் யாராவது ஒருவர் எதிர்வரும் அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினால் நல்லம் தானே? என கேட்டார்கள்.
அதற்கு நான், ஒருவரின் பெயரை கூறி அவரை வேட்பாளராக களம் இறக்கினால் நல்லது.
அவர் இலங்கைக்காக சர்வதேச ரீதியில் தங்கப் பதக்கத்தினை வென்ற ஒருவர் என்பதனால் அனைவரும் அறிந்திருக்கக் கூடிய ஒருவர் என பதிலளித்திருந்தேன்.
கட்சிகளின் நிலைப்பாடு
ஆனால் நான் அவரை தொடர்பு கொண்டு வினவிய போது தனது சுகயீனம் காரணமாக முடியாது என கூறிவிட்டார் எனக்கூறினேன்.
அப்போது ஊடகவியலாளர்கள் என்னை களமிறங்குமாறு ஏனைய கட்சிகள் கேட்டால் உங்களது நிலைப்பாடு என்ன என்று? கேட்டார்கள்.
அதற்கு பதிலளிக்கும் முகமாகவே, அனைத்து கட்சியினரும் என்னை அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குமாறு கூறினால் நான் அதை செயற்படுத்துவேன் என கூறினேன்.
இதைதவிர எந்த சந்தர்ப்பத்திலும் நான் அதிபர் வேட்பாளராக களமிறங்க உள்ளேன் என தெரிவிக்கவில்லை.
அதனை ஊடகவியலாளர்கள் தான் கேட்டார்கள் அவர்களே செய்தியாக பிரசுரித்துள்ளார்கள்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |