அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாச - ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானம்
இலங்கையில் இடம்பெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் அதிபர் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின் அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தல்
இலங்கையில் அதிபர் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதில் அரசியலமைப்பில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபர் ஒருவர் தமது பதவிக் காலம் நிறைவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அதிபர் தேர்தலுக்கு செல்ல தற்போதைய அரசியலமைப்பு திருத்தத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.
எனினும், மக்களால் தெரிவு செய்யப்படாத அதிபர் ஒருவருக்கு அத்தகைய அதிகாரம் அரசியலமைப்பில் இல்லை என சில கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழலில் அது குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் திருத்தம்
எனவே, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய பதவிக் காலத்தை நிறைவு செய்ய நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அதிபர் தேர்தலுக்கு செல்லும் அதிகாரத்தை வழங்கும் வகையில், அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தப் பின்னணியில் அடுத்த அதிபர் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின் அதிபர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.