அதிபரின் பொய்யான அறிக்கை : ஞானார்த்த பிரதீபய
சமீபக்காலமாக அதிபர் ரணில் விக்ரமசிங்க ஜேர்மனிய ஊடகமொன்றிற்கு அளித்த நேர்காணலானது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வகையில், கத்தோலிக்க திருச்சபையால் வெளியிடப்படும் இலங்கையின் முதலாவதும் பழமையானதுமான சிங்கள பத்திரிகையான ஞானார்த்த பிரதீபயவின் இந்த ஞாயிற்றுக்கிழமை பதிப்பில் அதிபரின் பொய்யான அறிக்கை என்ற தலைப்பில் கட்டுரையொன்று மேற்சொன்ன நேர்காணலில் அதிபர் அளித்த பதிலுக்கான பிரதிபலிப்பாக வெளிவந்துள்ளது.
ஜேர்மனிய ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆயர்கள் பேரவையோடு கதைத்ததாக தெரிவித்தமைக்கு மறுப்பு வெளியிட்டே இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
அதிபர் தொடர்பு கொள்ளவில்லை
கத்தோலிக்க திருச்சபையின் உத்தியோகபூர்வ பத்திரிகையான 'ஞானார்த்த பிரதீபய' எழுப்பிய கேள்விக்கு பதலளித்த, கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் ஹரோல்ட் அந்னி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதிக்க கத்தோலிக்க பேரவையை அதிபர் தொடர்பு கொள்ளவில்லையென தெளிவாக தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
“எவ்வாறாயினும், நாட்டின் தேசிய பிரச்சினைகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த நிலைப்பாடு அனைத்து ஆயர்களின் உடன்பாட்டுடன் கூட்டாக வெளிப்படுத்தப்படும்.
அதிபரை தான் தனிப்பட்ட ரீதியில் சந்தித்த சந்தர்ப்பத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைய கிடைக்கப்பெற்ற, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை அடங்கிய ஆறு குறுந்தகடுகளை சட்டத்தரணிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர், புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருடன், குருநாகல் ஆயர் ஆலயத்தில், அந்த மறைமாவட்டத்தின் இரு அருட்தந்தையர்களை சந்தித்த கத்தோலிக்க பேரவையின் தலைவர், பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்தன.” என்றார்.